Monday, 18 March 2013

வெள்ளாடு வளர்ப்பு


திட்டமிட்டு வெள்ளாடு வளர்க்கத் தொடங்குபவருக்கு, விலங்கினங்கள் மீது ஒரு பாசமும், ஆர்வமும் இருக்க வேண்டும். இது ஓர் அடிப்படைத் தேவை எனலாம். வெள்ளாடுகள் நம்மைப்போல் உயிருள்ளவை. ஆகவே, அவற்றின் மீது அக்கறை காட்டினால்தான் அவை சிறக்கும். அதக் காரணமாக அதிக வருவாய் பெற முடியும். அடுத்து, அதிக அளவில் நல்ல முறையில் வெள்ளாடு வளர்ப்பவருக்குத் தேவையான நிலமும், முதலீடும் தேவை. அடுத்தபடியாக ஓரளவு வெள்ளாட்டுப்பால் விற்பனைக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக ஆடுகள் விற்பது எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.
நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம்.
எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை. இது குறித்து இனச்சேர்க்கை என்னும் பகுதியில் விரிவாக விவாதிக்கலாம்.
வெள்ளாடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
  1. இளம் ஆடுகளையே வாங்க வேண்டும். நல்ல ஆடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். இளம் ஆடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல் பார்த்து வாங்க வேண்டும். பல் அடிப்படையில் வயது நிர்ணயிப்பது.
3 மாத வயது வரை — பால் பல்
1 1/2 வயது வரை — 2 பல்
2 வயது வரை — 4 பல்
3 வயது வரை — 6 பல்
4 வயது வரை — 8 பல்
வெள்ளாட்டுக் குட்டிகள் பிறக்கும் போதே, முன் தாடையில் ஆறு வெட்டும் பற்கள் இருக்கும். ஆனால் கன்றுகளுக்கு இரண்டு பற்கள் மட்டுமே உண்டு.
இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.
  1. ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதைவிச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அதுவும் நோய்த் தாக்குதல் அறடற பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அருகே பண்ணைகள் இல்லாத சூழ்நிலையில் சில ஆடு வளர்ப்பவர்களிடம் வாங்கிச் சேர்க்கலாம்.
  2. பல குட்டிகள் போடும் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தாய் ஆடு, 3-4 குட்டிகள் போட்டால், அதன் பெண் குட்டியும் அவ்வாறே பல குட்டிகள் ஈனும். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் 3-4 குட்டிகள் ஈனும் ஆடுகளை வளர்ப்போர் சில ஊர்களில் இருக்கின்றார்கள். இவற்றைத் தேடி வாங்கலாம். இப்படி நான் வாங்கிய ஆடு முதல் ஈற்றில் மூன்று குட்டியைத் தாங்கியது.
  3. போட்ட குட்டிகளைக் காக்கவும், வளர்ப்போருக்குச் சிறிது பால் கொடுக்கவும் ஏற்றதாக, நன்கு பால் வழங்கும் திறனுடைய பெட்டையாடாக இருக்க வேண்டும். நன்கு திரண்ட வளர்ச்சியடைந்த மடியுள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மடியில் பாதிப்புள்ளதா என்பதை நன்கு ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
  4. மிருதுவான, பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.
  5. சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் கூடிய கண்களை உடைய ஆடுகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுவும் ஆட்டின் நலத்தைக் காட்டுவதே.
  6. முதுகுப் புறமும், பின் பகுதியும், அகன்று விரிந்து இருக்கும் ஆடுகள் சிறந்தவை. அகன்ற முதுகுப் புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையையும், அகன்ற பின்புறம் சிறந்த இனப் பெருக்கக் குணத்தையும் காட்டுவனவாகும்.
புதிதாக வாங்கிய வெள்ளாடுகளை உடனடியாக மற்ற ஆடுகளுடன் சேர்க்கக் கூடாது. ஆடுகளை ஒதுக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும். இத்துடன் உடலில் உள்ள உண்ணி, பேன், தெள்ளுப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். பிறகு, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இவையாவும் முடிந்த பின்பே பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்க வேண்டும்.
வெள்ளாடு வளர்ப்பு முறைகள் குறித்து எழுதுமுன் வெள்ளாடுகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது.
  1. வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.
  2. வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.
  3. செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.
  4. செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.
  5. வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.
  6. வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.
  7. செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்.
தொகுப்பு  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி

ஆடுகளை தேர்வு செய்தல்

ஆடுகளை நாம் கறிக்காக வளர்ப்பதால் நல்ல ஆரோக்கியமான வளமான ஆடுகளையே வாங்கி வளர்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ற ஆடுகளை வாங்கி வளர்க்கலாம். சினை ஆடுகளாக வாங்கினால் நாம் வாங்கியவுடன் அவற்றிலிருந்து குட்டிகளை பெறலாம். பெட்டை ஆடுகளை வாங்கும் பொழுது அவை 1 வருடம் நிரம்பியவைகளாக வாங்க வேண்டும். இளம் குட்டிகளாக வாங்கும் பொழுது 3 மாதத்திற்கு மேலான வளமான குட்டிகளை வாங்கி வளர்க்கலாம். 20 பெட்டை ஆடுகளுக்கு 1 கிடா என்ற விகிதத்தில் ஆடுகளை வளர்க்க வேண்டும். கிடாக்கள் திடகாத்திரமாகவும், பெட்டை ஆடுகளை சினைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பண்ணையில் கிடா ஆடுகள்தான் முக்கியமானதாகும்.
தீவனம் : ஆடுகளை மேய்ச்சலுக்கு மட்டுமே அனுப்பி வளர்த்து வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் புற்கள் அதிகம் இருப்பதால் மற்ற காலங்களில் ஆடுகள் வளமாக இருக்காது. எனவே ஆடு வளர்ப்போர் தேவையான தீவனப்புற்கள் மற்றும் வேலி மசால் போன்ற தீவனப்பயிர்களை வளர்த்து ஆடுகளுக்கு கொடுக்கலாம். ஆடுகளை தினமும் ஒரே இடத்தில் மேய்க்காமல் வேறு வேறு இடங்களில் மேய்க்க வேண்டும். கோடைகாலங்களில் சுமார் 10 மணிநேரங்களாவது மேய்க்க வேண்டும். மேலும் அவைகளுக்கு அடர்தீவனமும் கொடுக்கப்பட வேண்டும். வெள்ளாடுகள் கசப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு போன்ற சுவைகளை அறியும் திறன் பெற்றவை. தீவனம் சுத்தமாகவும், புதியதாகவும் இருப்பதை விரும்பும். விதவிதமான மர இலைகள், செடிகள், மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை உண்ணும். ஆடுகளுக்கு பசுந்தீவனங்கள் (புற்கள் மற்றும் மரத்தழைகள்) கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அதாவது கோ-1, கோ-3, கினியா புற்களை கொடுக்கலாம். மேலும் மரதழைகளான வேலிமசால், சூபாபுல், அகத்தி, கிளரிசிடியா, கொடுக்காபுளி, வேப்பமரஇலை, ஆலமரம், கருவேலமரம், பூவரசு, காட்டுவாகை, பலாமரம் இலை முதலியவைகளை கொடுக்கலாம். அடர்தீவனமும் ஆடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
அதாவது குட்டிகளுக்கு 50 கிராம், வளரும் ஆடுகளுக்கு 100 கிராம், பெரிய ஆடுகளுக்கு 200 கிராம் என்ற அளவில் தினமும் கொடுக்க வேண்டும். குட்டிகள் பிறந்த 20 நாட்களுக்கு பிறகு சிறிது சிறிதாக புற்களை கடிக்க ஆரம்பிக்கும். பின்னர் அடர்தீவனத்துடன் பயிறு வகைப் புற்கள் அதாவது ஸ்டைலோ, வேலிமசால் போன்றவற்றை தீவனமாகக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.

தலச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும்?

(சகாதேவனம், திருவாச்சியூர், ஆத்தூர், சேலம்)
கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் இடத்தில் இந்த இன ஆடுகள் கிடைக்கும் மற்றும் சென்னையில் உள்ள காட்டான் குளத்து¡ர் கால்நடை பண்ணையில் கிடைக்கும்.
முகவரி – கிருஷி விக்யான் கேந்திர (KVK), காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி எண்: 044-27452371
பதில்  : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,  புதுச்சேரி

low tech permaculture

low tech permaculture My easiest improvement was to add animals (ducks and chickens).Free-range ducks keep bugs, snails and bugs away and ch...